
தமிழருக்கு போட்டியாக தமிழர்? திருச்சி சிவாவை இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு என தகவல்
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் வேட்பாளராக திமுகவின் மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நகர்வு, தமிழகத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அவரை நிறுத்துவதன் மூலம், பிராந்திய அரசியல் சவால்களை முறியடிக்கும் ஒரு மூலோபாய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. வேட்பாளரை இறுதி செய்ய, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) மாலை எதிர்க்கட்சிகள் சந்திக்கும் கூட்டத்திற்குப் பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஜக்தீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்ததை அடுத்து, துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திரிணாமுல் காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸால் சிக்கல்
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம், பாஜகவின் தென்னிந்திய நகர்வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி இந்த முடிவை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், இந்த முடிவு இந்தியா கூட்டணியின் முக்கிய உறுப்பினரான திரிணாமுல் காங்கிரஸுடன் உறவில் விரிசலை ஏற்படுத்தலாம். கடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் மார்கரெட் ஆல்வா வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, திரிணாமுல் காங்கிரஸ் வாக்களிக்காமல் விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது. சி.பி.ராதாகிருஷ்ணனின் தேர்வை பாஜக தமிழர்களுக்கு பெருமைக்குரிய தருணம் என்று குறிப்பிட்டாலும், திமுக இதை தேர்தல் பிரச்சாரம் என்று கூறி நிராகரித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 22 ஆகும்.