உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது நாட்டின் கடல்சார் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் இரட்டை முன்னேற்றங்களைக் குறிக்கிறது. இதில் முதலாவதாக வந்த தகவல், இந்திய கடற்படை தனது இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை (எஸ்எஸ்பிஎன்) ஐஎன்எஸ் அரிகாட்டை இயக்கும் தருவாயில் உள்ளது என்பதுதான். அதே நேரத்தில் மற்றொரு தகவலாக, ஆறு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை (எஸ்எஸ்என்) கட்டமைக்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு காட்டியுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. இந்த திட்டங்கள் முழுமையடையும்போது, இந்தியாவின் கடற்படை வலிமை புதிய உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இரண்டாவது உள்நாட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் குறித்த விபரங்கள்
இந்தியாவின் இரண்டாவது உள்நாட்டில் கட்டப்பட்ட எஸ்எஸ்பிஎன் வகை கப்பலான ஐஎன்எஸ் அரிகாட், தற்போது இந்திய கடற்படைக்கு தேவையான சோதனைகள் மற்றும் மேம்படுத்தல்களின் இறுதி கட்டத்தில் உள்ளது. தகவலறிந்த வட்டாரங்களின்படி, இந்த நீர்மூழ்கிக் கப்பல் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக சேவையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஎன்எஸ் அரிகாட் நீருக்கு வெளியே மணிக்கு 12-15 நாட்டிக்கல் மைல் வேகத்திலும், நீருக்குள் மணிக்கு 24 நாட்டிக்கல் மைல் வேகத்திலும் செல்லும் திறன் கொண்டது. அதன் முனையில் நான்கு ஏவுகணைக் குழாய்களைக் கொண்டுள்ளது மற்றும் 3,500 கிலோமீட்டர்களுக்கு மேல் சென்று வரக்கூடிய நான்கு அணுசக்தி திறன் கொண்ட கே-4 நீர்மூழ்கிக் கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுமந்து செல்லும்.