LOADING...
இந்திய விமானப்படைக்கு 114 புதிய ரஃபேல் ரக விமானங்கள்; ரஷ்யாவின் Su-57 ஐயும் குறிவைக்கும் இந்தியா
114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டம்

இந்திய விமானப்படைக்கு 114 புதிய ரஃபேல் ரக விமானங்கள்; ரஷ்யாவின் Su-57 ஐயும் குறிவைக்கும் இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Jan 17, 2026
06:46 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய வான்வெளியின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் வாரியம் இதற்கான முதற்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது. தற்போது இந்திய விமானப்படையிடம் அனுமதிக்கப்பட்ட 42 ஸ்குவாட்ரன்களுக்குப் பதிலாக 29-30 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஒப்பந்த விபரங்கள்

மேக் இன் இந்தியா மற்றும் ஒப்பந்த விபரங்கள்

இந்த மெகா ஒப்பந்தத்தின் படி, 18 விமானங்கள் நேரடியாகப் பிரான்ஸில் முழுவதும் தயார் செய்யப்பட்டு பறக்கும் நிலையில் வாங்கப்படும். எஞ்சிய 96 விமானங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகை தரவுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதி வடிவம் பெறலாம். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இந்தியாவிலேயே ரஃபேல் விமானங்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் அமைக்கப்படும், இது உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும்.

ரஷ்யா

ரஷ்யாவின் Su-57 மற்றும் பிற தேர்வுகள்

ரஃபேல் விமானங்களுக்கான முன்னுரிமை ஒருபுறம் இருக்க, ரஷ்யாவின் 5 ஆம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான Su-57 ஐ வாங்குவது குறித்த ஆலோசனையும் இன்னும் கைவிடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தனது பாதுகாப்புத் தேவைகளுக்காகத் தொடர்ந்து ரஷ்யாவைச் சார்ந்திருக்கும் அதே வேளையில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மேற்கத்திய விமானங்களையும் சம அளவில் பெற்று வருகிறது. Su-57 விமானங்களை வாங்குவது குறித்த திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகத் துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

நடவடிக்கை

அடுத்தகட்ட நடவடிக்கைகள்

பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு இறுதி முடிவை எடுக்கும். 2030 ஆம் ஆண்டிலிருந்து இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் சேரத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் வான்வழி ஆதிக்கத்திற்கு ஒரு தகுந்த பதிலடியாக அமையும்.

Advertisement