சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார்
சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு Newsbytes-ல் சிறப்பு கட்டுரை: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் என்றதும், நம் நினைவில் தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் வருவதில்லை. குறிப்பிட்டு கேட்டால் மட்டுமே நமது நினைவில் தமிழர்களை தேடுவோம். அதன்படி இப்பொழுது நாம் காணவுள்ளது வெள்ளையரை எதிர்த்த தமிழகத்தை சேர்ந்த முதல் பெண் ஆட்சியாளரான வேலு நாச்சியார் குறித்து தான். 1730ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி ராமநாதபுரத்தில் விஜயரகுநாத சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் மகளாக பிறந்தவர் தான் வேலு நாச்சியார். தனது சிறு வயதிலேயே சிலம்பம், வாள் வீச்சு, உள்ளிட்ட பல தற்காப்பு கலைகளை பயின்றவர் இவர். அதேபோல் இவருக்கு ஆங்கிலம், பிரென்ச், உருது உள்ளிட்ட மொழிகளும் தெரியும்.
மன்னர் ஹைதர் அலியிடம் படை உதவி கேட்ட வேலு நாச்சியார்
ஒரு ஆண் மகன் போல் வளர்க்கப்பட்ட வேலு நாச்சியார், தனது 16 வயதிலேயே சிவகங்கை அரசரான முத்துவடுகநந்தரை திருணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வெள்ளச்சி என்னும் மகள் பிறந்தார். இந்நிலையில் முத்துவடுகநந்தர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்த காரணத்தினால், 1772ல் ஆங்கிலேயர்களோடு நவாபின் படை இணைந்து போர் தொடுத்து, முத்துவடுகநந்தரை கொன்றனர். இது குறித்து அறிந்த வேலுநாச்சி, வெள்ளச்சியை அழைத்து கொண்டு சிவகங்கையை மீண்டும் மீட்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, முத்துவடுகநந்தருக்கு ஆட்சி செய்ய உறுதுணையாக இருந்த பிரதானி தாண்டவராயன், மருது சகோதரர்கள் ஆகியோருடன் வெளியேறினார். அங்கிருந்து விருப்பாட்சிப்பாளையம் என்னும் பகுதியில் தஞ்சம் அடைந்த வேலு நாச்சியார் மன்னர் ஹைதர் அலியிடம் படை உதவி கேட்டு முறையிட்டுள்ளார்.
படை உதவி செய்த ஹைதர் அலி மன்னர்
இதனிடையே, பிரதானி தாண்டவராயன் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்த நிலையில், மருது சகோதரர்களின் துணையோடு ஐந்தாயிரம் குதிரைப்படை, ஐந்தாயிரம் போர் வீரர்கள் கொண்ட ஓர் குழுவும், மருது வீரர்கள் தலைமையில் ஒரு போர் குழுவும், நள்ளியம்பலம் தலைமையில் ஓர் போர் குழு என மும்முனை தாக்குதல் நடத்த திட்டமிட்டார். இதன்மூலம் 'வெள்ளையர்களை எதிர்த்தி போரிட்ட முதல் தமிழ் பெண்' என்னும் வரலாற்று பெருமையினை இவர் பெற்றார். ஆங்கிலேயே காலனியப்படைகள் மூலம் ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தையும் மிக சாதுர்யமாக தகர்த்தெறிந்து முன்னேறியது, மங்கையின் தலைமையிலான போர் குழு. ஒரு கட்டத்திற்கு மேல், ஆங்கிலேயே காலனியப்படைகள் ஓடி ஒளிய துவங்கியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
8 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின்னர் ஆட்சியை பிடித்த வேலு நாச்சியார்
8 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக மீண்டும் சிவகங்கை மாவட்டத்தை கைப்பற்றிய வேலுநாச்சியார், தனது மக்கள் விருப்பப்படி ஆட்சி செய்தார். 18ம் நூற்றாண்டில் நிலையாக தென்னிந்தியாவில் ஆட்சி செய்த ஒரே அரசி, வேலு நாச்சியார் மட்டும் தான். எனினும், இவர் ஓர் கைம் பெண் என்பதால் அரசு இயல் நடவடிக்கைகளில் நேரடியாக செயல்படாமல் ஆட்சி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 1780 வரை அரசியாக இருந்து ஆட்சி செய்துவந்த வேலுநாச்சியார், அதன் பின்னர் தனது மகள் வெள்ளச்சியை அரசியாக்கி ஆட்சி செய்யவைத்துள்ளார். 1793ல், வெங்கம் உடையதேவனுக்கு தனது மகளை திருமணம் முடித்து, அவரை அரசராக அறிவித்தார் வேலு நாச்சியார். வெள்ளச்சி இறந்தநிலையில், தனது மகளை வெங்கம் உடையதேவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார், பெரிய மருது.
விருப்பாட்சிப்பாளையத்தில் உயிர் மாய்த்த வேலு நாச்சியார்
இந்த திருமணத்தில் வேலு நாச்சியாருக்கு அந்தளவுக்கு ஈடுபாடும் இல்லை, விருப்பமும் இல்லையாம். இது தெரிந்தும், பெரிய மருது தனது மகளை அரசனுக்கு மணம்முடித்து வைத்துள்ளார். இதனால் மனம் ஒப்பாமல், வேதனை அடைந்த வேலு நாச்சியார், சிவகங்கை அரண்மனையில் இருந்து வெளியேறியுள்ளார். அதன் பின்னர், அவர் விருப்பாட்சிப்பாளையத்தில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டில் வசித்து வந்தார் என்று வரலாறு கூறுகிறது. 1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார், 1793-ல் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார், 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார். இந்த சுதந்திர தினத்தன்று அவரை நினைவு கூறுவோம்!