தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்ததாக மு.க.ஸ்டாலின் அறிக்கை
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட்.,8)சென்னை தலைமை செயலகத்தில் காலநிலைமாற்றம், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை சார்பிலான 'ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு 2023'என்னும் அறிக்கையினை வெளியிட்டார். அதில், அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு வனத்துறை 2023ம்ஆண்டு மே.,மாதம் 17ம்தேதி முதல் 19ம்தேதி வரை யானை கணக்கெடுப்பினை நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் மத்திய அரசின் வனத்துறை மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள யானைகள், திட்ட இயக்குனரக பரிந்துரைப்படி, யானைகள் எண்ணிக்கையினை நேரடி மற்றும் மறைமுக முறைகளை பயன்படுத்தி கணக்கெடுக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் 26 வனக்கோட்டங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் காணப்பட்ட யானைகள் மற்றும் தொகுதி கணக்கிடுதல் முறை தரவுகளை அடிப்படையாக கொண்டு யானைகள் இனத்தொகை கட்டமைப்பு ஆராயப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பில் 2,099 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என தகவல்
மேலும், இந்த கணக்கெடுப்பு அறிக்கைப்படி, 2017ல்-2,761ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போதைய நிலவரத்தில் 2,961ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழக 4 பிற யானைகள் காப்பகத்தோடு ஒப்பிடுகையில் நீலகிரி யானைகள் காப்பகமானது 2,477யானைகளை கொண்டு அதிக எண்ணிக்கையினை கொண்டுள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1,105 யானைகள் உள்ள நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் 1,855 யானைகள் என எண்ணிக்கையில் அதிகளவு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இக்கணக்கெடுப்பில் பல்வேறு யானை சரகங்களில் 368 தன்னார்வலர்கள், 1,731 துறைபணியாளர்கள் என மொத்தம் 2,099பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த கணக்கெடுப்பு முறையானது டேராடூனில் இருக்கும் இந்திய வனவிலங்குகள் நிறுவனம், பெங்களூர் இந்திய அறிவியல் கழகம் மற்றும் மயிலாடுதுறையிலுள்ள ANC கல்லூரி ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.