தக்காளியின் விலை திடீர் சரிவு - வரத்து அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறிவருகிறார்கள்.
இதனிடையே தக்காளியினை மக்களுக்கு குறைவான விலையில் விற்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தது.
அதன் ஒரு பகுதியாக, தக்காளியினை நியாயவிலை கடைகளில் சோதனை முயற்சியாக குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி முதல்வர் உத்தரவின்பேரில் நியாயவிலை கடைகள், நடமாடும் காய்கறி அங்காடிகள் உள்ளிட்டவை மூலம் குறைந்த விலையில் தக்காளிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை
ரூ.100க்கு விற்பனையாகும் தக்காளி
இந்நிலையில், கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.120ல் இருந்து ரூ.140வரை மார்க்கெட்களில் விற்பனையானது.
அதனையடுத்து கடந்த வார இறுதியில், விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டு, ஒரு கிலோ ரூ.90ல் இருந்து ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு ஏற்ற இறக்கமாக இருந்த தக்காளியின் விலை நேற்று(ஜூலை.,18), ஒரு கிலோவிற்கு ரூ.125 என மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டதினையடுத்து, இன்று(ஜூலை.,19) மீண்டும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
அதன்படி சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்ததால், கிலோவுக்கு ரூ.25 குறைக்கப்பட்டு ரூ.100க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.