'சவர்மா' சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் - இறைச்சி விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது
தமிழ்நாடு-நாமக்கல் பழைய நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் 'ஐ வின்ஸ்' என்னும் தனியார் உணவகத்தில் 'சவர்மா' சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி(14) நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரைத்தொடர்ந்து அதே உணவகத்தில் அந்த 'சவர்மா'வை சாப்பிட்ட 11 மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 43 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று செய்திகள் வெளியானது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த உணவகத்திற்க்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் ச.உமா உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கிரில் மற்றும் சவர்மா சிக்கன்களை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டது. அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.அருண் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டது.
தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 35 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அதன்படி அக்குழுவினர் மாவட்டம் முழுவதுமுள்ள கோழிஇறைச்சிக்கடைகள், மீன் விற்பனைக்கடைகள், உணவகங்கள், துரித உணவகங்கள் என 140 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 37 கடைகளில் தரமற்றவையாக செயல்பட்டு வருவதனை கண்டறிந்து, 82.35கிலோ உணவுப்பொருட்கள் தரமற்றதன் காரணமாக அழிக்கப்பட்டுள்ளது. மேலும் 35 கடைகளுக்கு டாக்டர் அருண் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையே மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அந்த உணவக உரிமையாளர் நவீன்குமார் மற்றும் சமையல்காரர்கள் 2 பேர் முன்னதாக கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சுகாதாரமற்ற இறைச்சியினை விற்பனை செய்தார் என்று சுகாதாரத்துறை அளித்துள்ள புகாரின்பேரில், நாமக்கல் ராமாபுரம்புதூரை சேர்ந்த இறைச்சிக்கடை உரிமையாளர் சீனிவாசனை காவல்துறை தற்போது கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.