தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - ஒரு அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்கப்படும்
கடந்தாண்டு பொங்கல் சிறப்புப்பரிசு தொகுப்பினை சிறந்த முறையில் விநியோகம் செய்ததற்காக ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க முடிவுச்செய்து அதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு ரேஷன் அட்டைக்கு 50-பைசா வீதம் வழங்கப்படும் பட்சத்தில் ரூ.1 கோடியே 7 லட்சத்தினை தமிழகஅரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்து கூட்டுறவுச்சங்க பதிவாளர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசுத்தொகுப்பினை மிகசிறப்பான முறையில் வழங்கியதற்காக தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்களின் பணிசுமையினை கருத்தில் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 33 ஆயிரத்து 609 ரேஷன் கடைகளிலுள்ள 20 ஆயிரத்து 712 பணியாளர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சத்து 33 ஆயிரத்தி 750 வழங்க அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மண்டல வாரியாக பிரிக்கப்படும் ஊக்கத்தொகை
மேலும் அந்த அரசாணையில், ஒரு அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கியுள்ள இந்த தொகையினை அலுவலக நிதி ஆலோசகர், பதிவாளர், முதன்மை கணக்கு அலுவலர் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் வரவு வைப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊக்கத்தொகை மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த குறிப்பிட்ட மண்டலங்களுக்கு கொடுக்கப்படவேண்டிய தொகையினை மத்திய கூட்டுறவு வங்கி கணக்குகளில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னரே, இந்த ஊக்கத்தொகையானது ரேஷன் கடையில் பணிபுரிவோருக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.