'வரலாற்று நாள்': மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் இடஒதுக்கீடு மசோதா
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அறிமுகப்படுத்தப்படும் முதல் மசோதா இதுவாகும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தனது முதல் உரையை ஆற்றிய பிரதமர், இது "வரலாற்று சிறப்புமிக்க அமர்வு" என்று தெரிவித்தார். மேலும், "நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு" அவர் வாழ்த்து தெரிவித்தார். வணிகத்தின் துணைப் பட்டியல் மூலம் இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்துவதற்காக அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது. பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, மாநில மற்றும் தேசிய அளவில் கொள்கை வகுப்பதில் பெண்களின் அதிக பங்களிப்பை இலக்காகக் கொண்டது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2026க்குப் பிறகு தான் இந்த மசோதா சட்டமாக்கப்படும்
2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை அடைவதற்கு பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று மசோதாவின் நோக்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நாரி சக்தி வந்தான் ஆதினியம்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மசோதா, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்கிறது. ஆனால், 2026க்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பின் நடத்தப்படும் அடுத்த எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பிறகுதான் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். இந்த மசோதாவை சிறப்பு கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.