வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி
தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட மூன்று FIRகளையும் இணைக்கக் கோரிய யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று(மே 8) தள்ளுபடி செய்தது. வட மாநில தொழிலாளர்கள் குறித்து போலி செய்திகளை யூடியூப்பில் பரப்பியதற்காக யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது பீகார் மற்றும் தமிழ்நாட்டில் 3 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த மூன்று FIRகளையும் இணைக்கக் கோரி மணிஷ் காஷ்யப் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, அவரது மனுவை ஏற்க மறுத்தது. மேலும், நிவாரணம் பெற உயர் நீதிமன்றத்தை நாடுமாறு உச்ச நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது
"தமிழ்நாடு போன்ற ஒரு நிலையான மாநிலம்.. ": உச்ச நீதிமன்றம்
தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை பரப்பியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்(NSA) கீழ் மணீஷ் காஷ்யப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் பீகாரில் உள்ள சம்பாரண் காவல் நிலையத்தில் காஷ்யப் சரணடைந்தார். அவரது மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், "தமிழ்நாடு போன்ற ஒரு நிலையான மாநிலத்தில் பிரச்சனைகளை உருவாக்க நீங்கள் எதையும் பரப்புகிறீர்கள்! இதையெல்லாம் எங்களால் காது கொடுத்து கேட்டு கொண்டிருக்க முடியாது" என்று கூறியது. காஷ்யப்பின் வழக்கறிஞர் மனிந்தர் சிங், காஷ்யப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும் செய்தித்தாள் கட்டுரைகள் மற்றும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் தான் அவர் அந்த வீடியோக்களை உருவாக்கினார் என்றும் வாதிட்டார்.