சரத் பவாரை விட அஜித் பவாருக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) சேர்ந்த 53 எம்எல்ஏக்களில் குறைந்தபட்சம் 28 எம்எல்ஏக்கள் அஜித் பவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவின் மிக முக்கிய எதிர் கட்சியாகும். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சரத் பவாரும் அஜித் பவாரும் அக்கட்சியின் மிக முக்கிய தலைவர்கள் ஆவர். அவர்கள் இருவரும் அரசியல் தலைவர்கள் எனபதையும் தாண்டி மிக நெருங்கிய உறவினர்களும் கூட. இந்நிலையில், சரத் பவாரின் மருமகனான அஜித் பவார், இரண்டு நாட்களுக்கு முன் திடீரென்று ஆளும் பாஜக அரசுடன் இணைந்தார். இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது.
சரத் பவாருக்கு 17 எம்எல்ஏக்கள் ஆதரவு
இந்த கிளர்ச்சியை ஏற்படுத்திய அஜித் பவாரை தகுதி நீக்கம் செய்யக் கோரி சரத் பவார் தரப்பினர் கோரிக்கைவிடுத்து வந்த நிலையில், அக்கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதை நிரூபிக்கும் வகையில் அஜித் பவார் இன்று மும்பை பாந்த்ராவில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்த கூட்டத்தில் குரைந்தது 28 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு போட்டியாக சரத் பவாரும் ஒரு கூட்டத்தை நடத்தினார். மும்பை நாரிமன் பாயிண்டில் இன்று மதியம் 1 மணிக்கு நடைபெற்ற சரத் பவாரின் கூட்டத்தில் வெறும் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்துகொண்டனர். எனினும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் விதிகளில் இருந்து தப்பிக்க அஜித் பாவருக்கு 36க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.