ஜார்கண்ட் மாநிலத்தில் பி.எஸ்.என்.எல். டவரை திருட முயன்ற 6 நபர்கள் கைது
கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பீகாரில் மாநிலத்தில் உள்ள 60 அடி பாலத்தை ஏழு திருடர்கள் திருடி சென்ற சம்பவம் பெருமளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பேசுபொருளாக மாறியது. இதனை தொடர்ந்து, இதே போன்ற மற்றொரு சம்பவம் தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளது. அதன் படி, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிட்பக் என்னும் கிராமத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். டவரை முழுவதுமாக திருட முயன்ற 6 மர்ம நபர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் அமைந்துள்ள கிராமத்தில் கடந்த 2009ம் ஆண்டு இந்த பி.எஸ்.என்.எல். டவரானது நிறுவப்பட்டது. இந்த டவரினை முழுவதுமாக தகர்த்து வண்டியில் ஏற்றிச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைது நடவடிக்கை மேற்கொண்ட போலீசார்
இது குறித்து அப்பகுதி மக்கள் ஏன் அகற்றுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு அந்நிறுவனம் தான் தங்களை அகற்ற கூறியதாக கூறியுள்ளார்கள். ஆனால் அந்த இளைஞர்கள் மீது சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள், உரிய ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். முதலில் தடுமாறிய அந்த இளைஞர்கள், பின்னர் சில போலி ஆவணங்களை தயாரித்து ஊர் மக்களிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து, அவர்கள்மீது மேலும் சந்தகமடைந்த அக்கிராம மக்கள் லோக்கல் போலீசுக்கும், பி.எஸ்.என்.எல்.நிறுவனத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். பி.எஸ்.என்.எல்.பொறியாளர் மனோஜ்குமார் சிங் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குசென்ற போலீசார் டவரை திருடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 6 பேரை கைதுசெய்துள்ளார்கள். அவர்களுள் 5 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மட்டும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.