இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது
இந்தியாவின் மொத்த விலை பணவீக்கத்திற்கு ஏற்ப மருந்துகளின் விலையினை மாற்றியமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி 27 சிகிச்சைகளுக்காக 384 மூலக்கூறுகள் கொண்ட 900 மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 12% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி வலி நிவாரணிகள், ஆன்டிபயோட்டிக் மருந்துகள், இதய நோய் மருந்துகள் ஆகியன விலைகளில் உயர்வு ஏற்படும். மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்திக்கான செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் விலையுயர்வடைகிறது என்று கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு கோரிக்கையினை கடந்த சில மாதங்களாகவே மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வைத்து வருகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.
மருந்துகளின் விலையுயர்வு பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியலில் பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின் மற்றும் தாதுக்கள் கொண்ட மருந்துகள் அடங்கும். ஏற்கனேவே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது, தற்போது உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் உயரும் செய்தி பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏழை, எளிய, மூத்த குடிமக்கள் தங்கள் மாத பட்ஜெட்டில் மருந்துக்கான செலவு கூடுதலாகும் என்பதை நினைத்து வேதனை அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.