கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக சுற்றுவட்டார கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி 2000 முதல் 2006ம்ஆண்டு வரை நடந்தது. தற்போது அதே கிராமங்களில் கூடுதல் இழப்பீடு வழங்குவதாக கூறி மேலும் சில நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனால் முன்னதாக நிலம் வழங்கிய மக்கள் தங்களுக்கும் கூடுதல் இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தரப்பணி உள்ளிட்டவை வழங்க வேண்டும் என கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கீழ்வளைமாதேவி பகுதியில் 2006ல் கையகப்படுத்திய நிலத்தை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டது. எதிர்ப்பை மீறி நடந்த இப்பணிக்கு காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அன்புமணி ராமதாஸ் அழைப்புக்கு பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு
இதனை தொடர்ந்து பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்நிலையில் விவசாய நிலத்தினை கட்டுப்பாட்டில் எடுக்க என்.எல்.சி. நிர்வாகம் துடிப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் வரும் சனிக்கிழமை(நாளை) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பிற்கு பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.