Page Loader
கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு
கடந்தாண்டில் மட்டும் 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு

எழுதியவர் Nivetha P
Jan 03, 2023
04:42 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசி, கோதுமை, சீனி போன்ற பொருட்களை பதுக்குபவர்கள் மற்றும் கடத்துபவர்களை பிடிக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி மதுரை மண்டலத்தில் 10 மாவட்டங்களில் அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள் அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் சேருகிறதா என்பதை கண்டறியவும், ரேஷன் பொருட்களை கடத்துவது மற்றும் பதுங்குவது போன்ற குற்றங்களை தடுக்க மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்ட் சிநேகப்பிரியா தலைமையில் 10 மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 2022ம் ஆண்டில் மட்டும் 2,113 நபர்கள் மீது 1981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'இந்தாண்டும் நடவடிக்கை தொடரும்'-போலீஸ் சூப்பிரண்ட் எச்சரிக்கை

2022ம் ஆண்டில் மட்டும் ரூ. 11 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல்

மேற்கூறியவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கையில், ரூ. 11 கோடி 40 லட்சம் மதிப்புள்ள 1,405 டன் ரேஷன் அரிசி, 2,676 லிட்டர் மண்ணென்ணை, கோதுமை, பருப்பு, பாமாயில், உள்ளிட்ட மற்ற பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளது. மேலும் இந்த பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட 695 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதே போல், 2023ம் ஆண்டும் அரசு வழங்கும் ரேஷன் பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்ட் சிநேகப்ரியா எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.