செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, அக்டோபர் 3 கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வரும் 8-ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதேபோல நாளை, அக்டோபர் 4, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை
மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது, ஒடிஷாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கில் 160 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கு கிழக்கில் 170 கி.மீ. தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.