LOADING...
தென் மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை! சனிக்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை! சனிக்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2026
09:35 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை காலை உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, பிப்ரவரி 20 முதல் 25-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை

மழை பெய்யும் மாவட்டங்கள்

சனிக்கிழமை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஞாயிற்றுக்கிழமை, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் பலத்த மழை நீடிக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை ஒட்டி 'மஞ்சள்' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகாலையில் லேசான பனிமூட்டம் நிலவும். மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், வெள்ளிக்கிழமை அப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement