கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து
செய்தி முன்னோட்டம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முன்னதாக இதில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு நிவாரணத்தொகையாக தலா ரூ.10லட்சமும், சிகிச்சைப்பெற்று வருவோருக்கு தலா ரூ.50ஆயிரம் வழங்குவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனிடையே அந்த ரூ.50ஆயிரம் நிவாரண தொகையானது கள்ளச்சாராயத்தினை காய்ச்சிய முக்கியக்குற்றவாளிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளியான அமாவாசை என்பவர் திமுக கவுன்சிலர் நாகப்பன் என்பவரது தம்பி.
இவர் தானும் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
இந்தியாவிலேயே ஏன் இந்த உலகத்திலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கிய கோமாளித்தனமான அரசு தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு தான் என்று அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி கே பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கைது
கைது செய்யப்பட்ட அமாவாசை சிறையில் அடைப்பு
மேலும் இதற்கு ஆதாரமாக எடப்பாடி கே பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், குற்றவாளிகள் பெயர் பட்டியலில் 4 பேரில் முதல் நபராக அமாவாசை பெயர் இருப்பதையும்,
அரசு நிவாரணத்தொகை வழங்கிய பெயர் பட்டியலின் நகலையும் பதிவிட்டுள்ளார்.
இது பெரும் சர்ச்சையான நிலையில் அமாவாசைக்கு தவிர மற்ற அனைவருக்கும் காசோலை வழங்கப்பட்டது.
இவருக்கு ஒதுக்கப்பட்ட தொகையானது ரத்து செய்யப்பட்டதோடு, காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுவரை இந்த கள்ளச்சாராய வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.