ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு
ஒரே பாலின திருமணங்கள் போன்ற பிரச்சனைகள் உச்ச நீதிமன்றத்தில் தீர்க்கப்படக்கூடாது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று(ஏப்-26) தெரிவித்தார். ஒரே பாலின திருமண பிரச்னையை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து, சட்ட அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். "ஐந்து புத்திசாலிகள் அவர்களுக்கு ஏற்ப சரியானது எது என்பதை முடிவு செய்து கொண்டால்.. அவர்களுக்கு எதிராக நான் எந்த விதமான எதிர்மறையான கருத்துக்களையும் கூற முடியாது. ஆனால் மக்கள் அதை விரும்பவில்லை என்றால், நீங்கள் மக்கள் மீது அதை திணிக்க முடியாது." என்று குடியரசு உச்சி மாநாட்டில் பேசிய ரிஜிஜு கூறினார்.
இதை உச்ச நீதிமன்றம் தீர்மானிப்பது சரியல்ல: ரிஜிஜு
"திருமணம் போன்ற முக்கியமான விஷயத்தை நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டுக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம் உண்டு. சட்ட பிரிவு 142இன் கீழ், அவர்களும் சட்டத்தை இயற்றலாம். மேலும் சில வெற்றிடங்கள் இருந்தால் அவற்றை நிரப்பலாம். ஆனால், நாட்டின் குடிமக்களை பாதிக்கும் ஒரு விஷயத்தை உச்ச நீதிமன்றம் தீர்மானிப்பது சரியல்ல." என்றும் அவர் கூறியுள்ளார். "இதை நீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையேயான சண்டையாக நான் மாற்ற விரும்பவில்லை. இது நீதிமன்றத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயான விவகாரம் அல்ல. இது ஒவ்வொரு இந்திய குடிமகனும் சம்பந்தப்பட்ட விஷயம். இது மக்களின் விருப்பத்தின் கேள்வி. அதனால் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் தான் முடிவு செய்யப்பட வேண்டும்." என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.