'10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை
செய்தி முன்னோட்டம்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர், தற்கொலைக்கு முயற்சித்த ஒரு சிறுவனிடம் ஊக்கமளிக்கும் தன் கதையை கூறி தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
பல்லடம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்றும், அந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் எழுந்த புகாரை அடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், பல்லடம் அரசு மருத்துவமனையில் அதிரடி சோதனை நடத்துவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை(மே 26) அங்கு சென்றார்.
மருத்துவமனையின் வெவ்வேறு பிரிவுகளில் சோதனை நடத்திய அவர், நோயாளிகளிடம் ஏதாவது குறை இருக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார்.
அப்போது, 10ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தற்கொலைக்கு முயற்சித்த ஒரு மாணவனை அவர் சந்திக்க நேர்ந்தது.
details
திருப்பூரில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்
மருத்துவமனை ஊழியர்களிடம் அந்த சிறுவனை பற்றி கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், நேராக அந்த மாணவனை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "10ஆம் வகுப்பில் தோலிவியடைந்த நானே மீண்டும் முயற்சித்து மாவட்ட ஆட்சியர் ஆகிவிட்டேன். அப்படி இருக்கும் போது உன்னால் முடியாதா? இப்படி தோல்வியடையும் போது தான் நாம் மீண்டும் எழுந்து வர வேண்டும். 12ஆம் வகுப்பு தேர்வுக்கு நன்றாக படி. நல்ல மதிப்பெண் எடு. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்ததும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உன் மதிப்பெண்ணை சொல்ல வேண்டும். நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை." என்று அந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த நெகிழ்சியான நிகழ்வை கேட்டறிந்த பலருக்கும் இது பெரும் ஊக்கத்தை அளித்து வருகிறது.