மகன் இறந்தது கூட தெரியாமல், பிணத்துடன் பல நாட்கள் வாழ்ந்த பார்வையற்ற பெற்றோர்
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு துயரமான சம்பவத்தில் பார்வையற்ற பெற்றோர், தங்கள் மகன் இறந்து போனதை உணராமல், அவரின் உடலுடன் பல நாட்கள் வாழ்ந்தனர். நாகோல், பிளைண்ட்ஸ் காலனியில் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் அவசர அழைப்பு விடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த பிறகே இந்த சம்பவம் தெரியவந்தது. திங்கள்கிழமை சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், 60 வயது மதிக்கத்தக்க தம்பதியர், அரை மயக்கத்தில் இருந்த நிலையில், அவர்களது 30 வயது மகனின் உடலுடன் வாழ்ந்து வருவதை கண்டறிந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மகன் தூக்கத்தில் இறந்துவிட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
காவல்துறையினர் விசாரணையை துவங்கினர்
இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறப்புக்கான சரியான தேதி மற்றும் காரணத்தை கண்டறியவிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ரச்சகொண்டா காவல் நிலைய அதிகாரி சூர்யா நாயக்கின் கூற்றுப்படி, கண் தெரியாத பெற்றோர்கள், தங்கள் மகன் இறந்ததை அறியாமல், உணவு மற்றும் தண்ணீருக்காக அவரை தொடர்ந்து அழைத்தனர் என்றும், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என காத்திருந்ததாகவும் கூறினார். நகரின் வேறு பகுதியில் வசிக்கும் அவர்களின் மூத்த மகனை தற்போது காவல்துறையினர் தொடர்பு கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.