டிஜிட்டல் அரெஸ்ட்: ஹைதராபாத்தில் முதியவரிடம் 7 கோடி ரூபாய் மோசடி; அதிரவைக்கும் பின்னணி
செய்தி முன்னோட்டம்
ஹைதராபாத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான 7.12 கோடி ரூபாயை இழந்துள்ளார். சைபர் கிரைம் குற்றவாளிகள் எவ்வளவு நுணுக்கமாகவும், உளவியல் ரீதியாகவும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. முழு விவரம் இங்கே:-
மோசடி
மோசடி நடந்தது எப்படி?
இந்த மோசடி கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட முதியவருக்கு வந்த வாட்ஸ்அப் அழைப்பில், அவர் பெயரில் மும்பையிலிருந்து பாங்காக் சென்ற கொரியர் பார்சலில் போதைப்பொருள், பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருப்பதாக மிரட்டப்பட்டுள்ளது. முதியவர் மறுப்பு தெரிவித்ததும், மும்பை போலீஸ் உயர் அதிகாரி போலப் பேசிய மற்றொரு நபர், அவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதச் சதி வழக்குகள் இருப்பதாகக் கூறி பயமுறுத்தியுள்ளார். முதியவரைத் தனியாக ஒரு அறையில் இருக்கச் சொல்லி, டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாகக் கூறி, சிக்னல் செயலியைப் பதிவிறக்கச் செய்துள்ளனர். இதன் மூலம் 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வந்துள்ளனர்.
பணத்தை இழந்த விதம்
நிதி சரிபார்ப்பு என்ற பெயரில் சிறுக சிறுக பணம் பறிப்பு
முதலில் ரூ.19.80 லட்சத்தை ஒரு வங்கி கணக்கிற்கு அனுப்பச் சொல்லியுள்ளனர். பின்னர் அவரது மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிக்சட் டெபாசிட்டுகளைக் கலைக்கச் செய்து, மொத்தம் 7.12 கோடி ரூபாயைப் பறித்துள்ளனர். விசாரணை முடிந்ததும் இந்தப் பணம் திரும்பக் கிடைக்கும் என்று முதியவரை நம்ப வைத்துள்ளனர். டிசம்பர் 29 ஆம் தேதி, வழக்கை முடிக்க மேலும் ரூ.1.2 கோடி கேட்டபோதுதான் முதியவருக்குச் சந்தேகம் வந்துள்ளது. செய்தித்தாள்களில் இது போன்ற மோசடிகள் பற்றி வாசித்த பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
எச்சரிக்கை
காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை
தெலுங்கானா சைபர் செக்யூரிட்டி பீரோ மற்றும் போலீசார் பொதுமக்களுக்குக் கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இந்தியாவில் சட்டப்பூர்வமாக 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற முறையே கிடையாது. எந்தவொரு காவல் துறையினரும் வீடியோ கால் மூலம் ஒருவரைக் கைது செய்ய முடியாது. உண்மையான விசாரணை அமைப்புகள் ஒருபோதும் வழக்கை முடிக்க அல்லது சரிபார்க்க வங்கி கணக்கிற்குப் பணம் அனுப்பச் சொல்லாது. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.