குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள் தேர்வாகும் முறை உங்களுக்குத் தெரியுமா? இதோ சுவாரஸ்யமான தகவல்கள்!
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகள் முக்கிய ஈர்ப்பாக அமைகின்றன. 2026 ஆம் ஆண்டின் 77 வது குடியரசு தின அணிவகுப்பில் மொத்தம் 30 ஊர்திகள் (17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் 13 அமைச்சகங்கள்) கர்தாவ்யா பாதையில் வலம் வரவுள்ளன. குடியரசு தின அணிவகுப்பை நடத்தும் பொறுப்பு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் உள்ளது. இதற்காகக் கலை, கலாச்சாரம், ஓவியம், இசை மற்றும் கட்டிடக்கலை போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களைக் கொண்ட ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுதான் மாநிலங்கள் அனுப்பும் பரிந்துரைகளை ஆய்வு செய்து இறுதி செய்கிறது.
விதிமுறைகள்
ஊர்திகளில் இடம்பெற வேண்டியவை மற்றும் விதிமுறைகள்
தேர்வு செய்யப்படும் ஊர்திகள் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் அல்லது வளர்ச்சித் திட்டங்களைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இதற்கென சில கடுமையான விதிமுறைகள் உள்ளன: தொழில்நுட்பம்: ரோபாட்டிக்ஸ், 3டி பிரிண்டிங், எல்இடி விளக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே சுவர்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு: பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மொழிப் பயன்பாடு: ஊர்தியின் முன்பக்கத்தில் ஹிந்தி, பின்பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் பக்கவாட்டில் அந்தந்த மாநில மொழியில் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். லோகோக்கள் அல்லது இதர எழுத்துக்களுக்கு அனுமதி இல்லை. நடனம் மற்றும் இசை: ஊர்தியுடன் நடனம் இருந்தால், அது அந்த மண்ணின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமாக மட்டுமே இருக்க வேண்டும்.
தேர்வு
தேர்வு செய்யப்படும் நிலைகள்
சுமார் 6 முதல் 7 சுற்றுகள் வரை நடைபெறும் இந்தத் தேர்வு முறை மிகவும் சவாலானது: முதல் நிலை: மாநிலங்கள் அனுப்பும் ஓவியங்கள் அல்லது டிசைன்களை நிபுணர்கள் குழு ஆய்வு செய்யும். இதில் எளிமை மற்றும் தெளிவு மிக முக்கியம். இரண்டாம் நிலை: ஓவியம் திருப்திகரமாக இருந்தால், அதன் 3டி மாதிரியை உருவாக்கிச் சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நிலை: ஊர்தியின் தத்ரூபமான தோற்றம், அதனுடன் இசைக்கப்படும் இசை, பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த ஆண்டு மொத்தம் 30 ஊர்திகள் இடம்பெறும் நிலையில், தமிழகத்தின் சார்பில் "வளர்ச்சிக்கான தாரக மந்திரமாக விளங்கும் தற்சார்பு இந்தியா" இடம்பெற உள்ளது.