'இண்டியா' கூட்டணியை விடுத்து மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார் நிதிஷ் குமார்
ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சியுடனான தனது கட்சியின் கூட்டணியை முறித்து கொண்ட நிதிஷ் குமார் இன்று பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவர் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தையும் பாஜக மற்றும் ஜே.டி.யு ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளன. 2022 இல் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்ட நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பிற இடது சாரி கட்சிகளுடன் இணைந்தார். 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது 79 எம்எல்ஏக்களுடன் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், தனித்து ஆட்சி அமைக்க ஆர்ஜேடி கட்சிக்கு மேலும் 43 உறுப்பினர்கள் தேவை.
பீகாரில் ஆட்சி அமைக்க இருக்கும் பாஜக- ஜேடி(யு)
எனவே, ஆர்ஜேடி கட்சியின் கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஜேடி(யு) கட்சி விலகிவிட்டதால் ஆர்ஜேடியின் கூட்டணி ஆட்சி கலைக்கப்படும். 78 எம்எல்ஏக்களின் பலத்துடன் பாஜக பீகாரின் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது. எனவே, ஜேடி(யு) கட்சி பாஜகவில் இணைந்ததால், இனி பாஜக பீகாரில் ஆட்சி அமைக்கும். ராஜ்பவனில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் இன்று ராஜினாமா செய்தார். இன்று காலை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற கூட்டத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராஜினாமா கடிதத்தை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணியை கலைக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.