உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி போலீசார் இன்று தெரிவித்தனர். வெடிகுண்டை செயலிழக்க செய்யும் படையும், தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நார்த் பிளாக்கில் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததை அடுத்து DFS (டெல்லி தீயணைப்பு சேவை) க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அடையாளத்தை வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் இதை PTI இடம் கூறியுள்ளார். "தேடுதல் பணி நடந்து வருகிறது. இப்போது வரை, சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட மிரட்டல்கள்
டெல்லியில் உள்ள பள்ளிகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் சிறைகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களை அடுத்து, தற்போது உள்துறை அமைச்சகத்திற்கும் அது அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியைத் தவிர ஜெய்ப்பூர், லக்னோ, கான்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன. அந்த வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக டெல்லியில் உள்ள 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து, டெல்லி காவல்துறை இதற்கான விசாரணையைத் தொடங்கியது. mail.ru சர்வரில் இருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அந்த மிரட்டல் மின்னஞ்சல்களில், டெல்லியில் உள்ள பள்ளி வளாகங்களில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.