4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிசம்பர் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 8 மணி நேரத்தில் 9 இடங்களில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம், பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 35,000 கன அடி நீர் திறக்கப்படுவதால், தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளிலும் அணைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணிநேரத்திற்கு கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிகமாக கனமழை பெய்யும் என்பதால், அம்மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது போக, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.