புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
புயல் எச்சரிக்கை காரணமாக வரும் டிசம்பர்-4ம்,தேதி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர்-4ம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்லூரிகளும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும், இது நாளை புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்
இதனிடையே, புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று(டிச.,1)ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. எனவே, மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம் என்றும், இத்தடையினை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறக்கூடும். மேலும், இதனால், டிசம்பர் 3-ஆம் தேதி முதல், வட தமிழகக் கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் மழை மற்றும் காற்றின் தீவிரம் அதிகரிக்கும். மேலும், அந்த புயல் டிசம்பர் 4ஆம் தேதி மாலை தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கரையோரங்களில் கரையை கடக்கும்.