உத்தராகண்ட் சிறையில் 1 பெண் உட்பட 44 பேருக்கு HIV பாசிட்டிவ்
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்(HIV) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுசீலா திவாரி மருத்துவமனையின் ஏஆர்டி மைய பொறுப்பாளர் டாக்டர் பரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார். சிறையில் HIV வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், HIV-பாசிட்டிவ் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சிறை நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் டாக்டர் சிங் கூறினார். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறைக்குள் அமைக்கப்பட்டுள்ள ஏஆர்டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. "HIV நோயாளிகளுக்காக ஏஆர்டி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனது குழு சிறையில் உள்ள கைதிகளை தொடர்ந்து பரிசோதித்து வருகிறது." என்று டாக்டர் சிங் கூறியுள்ளார்.
1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் அந்த சிறைக்குள் உள்ளனர்
தேசிய AIDS கட்டுப்பாட்டு அமைப்பின் (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. "தற்போது 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் அந்த சிறைக்குள் உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான கைதிகளுக்கு HIV பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, HIV பாதித்த கைதிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், சிறை நிர்வாகமும் கைதிகளை தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறது." என்றும் அந்த மருத்துவர் கூறி இருக்கிறார். மருத்துவமனையில் இருந்து ஒரு குழு மாதம் இருமுறை சிறைக்கு சென்று கைதிகளை பரிசோதித்து வருகிறது.