
தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் மாணவர்களோடு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்துரையாடினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று(ஏப்ரல்.,13) காலை 'தமிழ்நாடு தரிசனம்' என்னும் தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களோடு தன்னுடைய இந்த உரையாடலை மேற்கொண்டார்.
அப்போது அவர், இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்து பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு 3500 ஆண்டுகளுக்கான வரலாறு மட்டுமில்லை அதற்கும் முந்தைய வரலாறு உள்ளது.
எனவே அத்தகைய பெருமைக்கொண்ட தமிழ் மொழியினை ஆழமாக படித்து தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும் என்றும் அவர் வலியறுத்தினார்.
ஆளுநர்
அனைத்து தரப்பினரும் திருக்குறளை படிக்க வேண்டும் - ஆர்.என்.ரவி
மேலும் அவர், பிறமொழி பேசுபவர்கள் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியினை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தி மொழியை விட தமிழ் மொழி மிக பழமைவாய்ந்த மொழியாகும்.
இத்தகைய சிறப்புமிக்க பழமையான மொழியான தமிழ் மொழி மீது இந்தி உள்பட எந்த மொழியினையும் திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர், தமிழ் மொழிக்கு நிகரான பழமைவாய்ந்த மொழி என்றால் அது சமஸ்கிரதம் மட்டும் தான்.
தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையானது.
அனைத்து தரப்பினரும் திருக்குறளை படிக்க வேண்டும்.
அதன் ஆழமான கருத்துக்களையும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
திருக்குறள் போல தமிழ் இலக்கியங்கள் ஏராளமாக உள்ளது என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.