ரேம்ப் வாக் செய்த விஜய் முதல் கூட்டணி குறியீடு வரை: தவெக மாநாடு ஹைலைட்ஸ்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் 'வெற்றி கொள்கை திருவிழா' என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொள்ள முந்தைய நாள் இரவே நடிகர் விஜய் கேரவனில் மாநாடு நடக்கும் இடத்தை அடைந்தார். நேற்று காலை முதலே விழா நடக்கும் திடலுக்கு வரிசையாக கட்சி தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் சாரைசாரையாக வந்திறங்கினார். காவல்துறையின் 'ஜீரோ டிராபிக்' என்ற அறிவுறுத்தலின்படி, முற்பகல் 11 மணிக்கு பின் அனைத்து வாகனங்களும் கட்டணம் வசூலிக்காமல் அனுப்பி வைக்கப்பட்டன. சரியாக மாலை 3 மணி அளவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மேடையேறிய கட்சியின் தலைவர் விஜய் உற்சாகமாக தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.
தொண்டர்கள் வீசிய கட்சி துண்டுகளை தோளில் போட்டுகொண்டு ரேம்ப் வாக் செய்த விஜய்
பின்னர் மேடை மீது ஓடி வந்து, 800 மீட்டர் நீளமுள்ள ரேம்பில் நடந்துவந்தார். அப்போது தொண்டர் ஒருவர் அவர்மீது வீசிய கட்சி துண்டை தன் தோளில் முதன் முதலாக அணிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் வீசிய துண்டுகளை வரிசையாக தன் தோளில் அணிந்து கொண்டார். தவறிய துண்டுகளை அவருடன் வந்த பவுன்சர்கள் சேகரித்தனர். பின்னர் மீண்டும் மேடைக்கு திரும்பிய விஜய் தன் தோளில் இருந்த கட்சி துண்டுகளை அங்கிருந்த டீபாயில் கவனமாக வைத்தார். அதிலிருந்த ஒரே ஒரு துண்டை மட்டும் அணிந்துகொண்டார் மேடையில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மேடையின் பின்னால் அமைக்கப்பட்ட திருப்பூர் குமரன், காமராசர், பெரியார், தமிழ் மன்னர்கள், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
கட்சியின் கொள்கைகள் மேடையில் வாசிக்கப்பட்டது
கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் விஜய் கொடியேற்ற, கட்சியின் கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார்,"மதம், சாதி, நிறம், இளம், மொழி பாலின் அடையாளம், பொருளாதாரம் என்ற தனி அடையாளங்களுக்குள் மனிதர்களை சுருக்காமல், அனைவரது சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி, பல்லோருக்கும் எல்லாம் என்ற சமநிலை சமூகத்தை உருவாக்குவோம். மக்களை இனம், மதம், மொழி, சாதி எனப் பாகுபடுத்தாமல், சம உரிமைகளை உத்தரவாதப்படுத்துவோம்" என வாசித்தார்.
மேடையில் முழங்கிய கட்சித்தலைவர் விஜய்
மேடையில் பேசிய கட்சித் தலைவர் விஜய்,"சாதாரண மனிதாக இருந்த விஜய், இளைஞனாக மாறினான், பின் நடிகனாக மாறினான், அதன்பின் வெற்றி பெற்ற மனிதனாக மாறினான். பொறுப்புள்ள மனிதனாக மாறினான். இப்போது பொறுப்புள்ள தொண்டனாக மாறியிருக்கிறான். அந்த பொறுப்புள்ள தொண்டன் நாளை.. அதை நான் சொல்லத் தேவையில்லை" என்று கூற, தொண்டர்கள் 'சிஎம்.. சிஎம்' என்று கூறி ஆரவாரம் செய்தனர். "ஆட்சி, அதிகாரம், சட்டம், நீதி, அரச இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை எதிர்த்து, மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவோம். ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சாதியை முழுவதும் ஒழிக்கும் வரை, அனைத்துப்பிரிவினருக்கும். அனைத்துத் துறைகளிலும் விகி தாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்குவோம்" எனவும் விஜய் பேசினார்.
ஏன் பெரியாரை தலைவராக ஏற்று கொண்டதை விளக்கிய விஜய்
"நம் கொள்கைகளின் அடையாளமாக மாறியவர் பெரியார். ஆனால், அவர் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதே நம் கொள்கை". "அடுத்து, நேர்மையான நிர்வாகம் தந்த காமராஜர், அரசியல் சாசனம் உருவாக்கிய அம்பேத்கர், வீரமிக்க பெண்களான வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள். இவர்கள் எல்லாம்தான் நம் கொள்கை தலைவர்கள். பிரிவினைவாத சித்தாந்தம் மட்டுமின்றி, ஊழல் மலிந்த கலாச்சாரத்தையும் ஒழிக்க வேண்டும். கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும் கபடதாரிகள்தான் இப்போது ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்" என்றார்.
ஆட்சியின் பங்கு என கூட்டணி அமைப்பவர்களுக்கும் வாக்குறுதி அளித்த விஜய்
பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்று மேடையில் கட்சியின் கொள்கை பற்றி கூறினார். அதோடு, மாநில தன்னாட்சி உரிமையே, மக்களின் தலையாய உரிமை. எனவே, மாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பதே தவெகளின் தன்னாட்சி கொள்கையாகும். தாய்மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை தவெக பின்பற்றுகிறது எனவும் தெரிவித்தார். "தமிழே ஆட்சி மொழி, வழக்காடு மொழியாக இருக்கும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு, தனியார் துறைகளில் அரசியல் தலையீடு இல்லாத, வஞ்சம் இல்லாத நிர்வாகம் கொண்டுவரப்படும்" எனவும் தெரிவித்தார்