Page Loader
கோவையில் பைக் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - இன்று முதல் அமல் 
கோவையில் பைக் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - இன்று முதல் அமல்

கோவையில் பைக் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - இன்று முதல் அமல் 

எழுதியவர் Nivetha P
Jun 26, 2023
02:11 pm

செய்தி முன்னோட்டம்

தற்போதைய காலக்கட்டத்தில் விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் காரணத்தினால் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன்படி, சமீபத்திய ஆய்வு ஒன்றில், இருசக்கர விபத்துகளில் தலைக்கவசம் அணியாத காரணத்தினால் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோவை மாநகரில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்போரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை மாநகர போலீசார் முன்னதாக தெரிவித்திருந்தனர். அதன்படி, அந்த விதியானது இன்று(ஜூன்.,26) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து, கோவையில் இன்று காலை முதல் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோர் சிலர் ஹெல்மெட் அணிந்து சென்றதை காண முடிந்தது என்று கூறப்படுகிறது.

ஹெல்மெட் 

ஹெல்மெட் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் கோவை போலீசார்

இந்நிலையில் மேலே குறிப்பிட்டவாறு, விதியினை மீறி ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றோரை போலீசார் தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது ஒரு வார காலத்திற்கு மட்டுமே. அதன் பின்னரும் ஹெல்மெட் இல்லாமல் பயணித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதோடு, வழக்குப்பதிவும் செய்யப்படும் என்று கோவை மாநகர போலீசார் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள். அதே போல் அதிக ஒலியினை எழுப்பும் ஏர் ஹாரன் இருசக்கர வாகனத்தில் பொருத்தியிருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.