சென்னை மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: வரும் 18ம் தேதி மிக கனமழை பெய்யுமாம்
சென்னைக்கு வரும் டிசம்பர் 18ஆம் தேதியன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாளை, டிசம்பர் 17ஆம் தேதியன்று செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறிய காரணத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், இன்று (16-12-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கே நகர வாய்ப்பு உள்ளது. இதனால், இன்று தமிழகத்தில் சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள், கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.