மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தும் படி மத்திய அரசு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார். பிற உலக நாடுகளான ஜப்பான், சீனா, அமெரிக்கா, பிரேசில், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாம் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கொரோனாவின் பிற வகைகளைக் கண்டறிய பாதிக்கப்பட்டவர்களின் மரபணு மாதிரிகளை ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.
கொரோனா பரவலுக்கு ஒரு ஆலோசனை!
உலகம் முழுவதும் பல லட்சம் உயிர்களைக் காவு வாங்கிய கொரோனா தற்போது சீனாவில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன வாசிகள் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவில் தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வரலாறு காணாத அளவு சீனாவை வாட்டி வதைக்கும் என்று ஹாங்காங் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். மேலும், சில உலக நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பிற அதிகாரிகளுடனும் நிபுணர்களுடனும் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தற்போது, கொரோனாவின் தாக்கம் 98% வரை இந்தியாவில் குறைந்திருந்தாலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பதற்காக இந்த ஆலோசனை நடத்தப்படுகிறது.