ரூ.6,000 நிவாரணத்தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படவில்லையா?-காரணம் அறிவோம்
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை இந்த புயல் காரணமாக முற்றிலும் சேதமடைந்தது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததாக கூறி வேதனை தெரிவித்தனர். இதனிடையே, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரண தொகை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கான டோக்கன்கள் வீடுவீடாக சென்று கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் கடந்த 17ம் தேதி துவக்கி வைத்தார். அதன் பின்னர் ரேஷன் கடைகளில் நிவாரண தொகை விநியோகிக்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்
தங்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன்கள் அடிப்படையில் மக்கள் வரிசையில் நின்று பணத்தினை பெற்று செல்கிறார்கள். இந்நிலையில், சிலருக்கு இதற்கான டோக்கன்கள் வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தது. இதற்கான காரணம், அரிசி அட்டை வைத்திருப்போரில் வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரது பெயர்கள் தவிர்க்கப்பட்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 4 சக்கர வாகனங்கள் வாங்கும் பொழுது கொடுக்கப்படும் ஆதார் எண் அடிப்படையாக கொண்டு 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் பெயர்களும் இப்பட்டியலில் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. தற்போது இவர்களுக்கு ஓர் வாய்ப்பளிக்கும் விதமாக, அவர்களுக்கென ஓர் விண்ணப்பம் கொடுக்கப்பட்டு அதில் தங்களுக்கான பாதிப்புகள் குறித்து குறிப்பிட்டு அதனை ரேஷன்கடையில் வழங்கவேண்டும். அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பின்னர் நிவாரணத்தொகை விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.