அக்டோபர் 17ஆம் தேதி; ஹரியானாவில் புதிய அரசு பதவியேற்க நாள் குறித்தது பாஜக
ஹரியானாவில் புதிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்கும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார். நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கவுள்ள பஞ்ச்குலாவில் இந்த விழா நடைபெறவுள்ளது. "அக்டோபர் 17 ஆம் தேதி முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பார்கள். இதற்காக பிரதமரின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம்." என்று மனோகர் லால் கட்டார் கூறினார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என பல தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பஞ்ச்குலாவில் ஏற்கனவே நடந்து வருகிறது. "நிகழ்ச்சிக்கான இடத்தை நாங்கள் தயார் செய்கிறோம்," என்று பஞ்ச்குலா துணை ஆணையர் டாக்டர் யாஷ் கார்க் இதை உறுதி செய்துள்ளார்.
அனைத்து முக்கிய சமூகத்தினருக்கும் அமைச்சரவையில் பிரதிநிதுத்துவம்
புதிய அரசாங்கம் வெவ்வேறு சாதிகளின் சமச்சீர் அமைச்சரவை பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய விரும்புகிறது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், இதை மனதில் வைத்து அமைச்சரவையில் இடம்பெறுபவர்களின் பட்டியல் குறித்து ஆலோசித்து வருகின்றனர். ஜாட், காத்ரி, பிராமணர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் சமூக எம்எல்ஏக்களுக்கு சமச்சீர் அரசாங்கத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சமீபத்தில் நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஹரியானாவில் ஒரு கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.