13 ஆண்டுகாலக் கண்ணீர் போராட்டம்! ஹரிஷ் ராணாவுக்கு கண்ணியமான மரணம் கிடைக்குமா? தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா (32), கடந்த 2013 ஆம் ஆண்டு சண்டிகரில் படித்துக் கொண்டிருந்தபோது, தனது தங்கும் விடுதியின் 4 வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கடந்த 13 ஆண்டுகளாக அவர் நினைவிழந்த நிலையில் படுக்கையிலேயே இருந்து வருகிறார். 100% ஊனமுற்ற நிலையில், சுவாசம் மற்றும் உணவிற்காகக் குழாய்களைச் சார்ந்திருக்கும் தனது மகனுக்கு மறைமுகக் கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி அவரது தந்தை அசோக் ராணா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
உச்ச நீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தின் விசாரணை
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கை விசாரித்தது. இந்த உணர்வுப்பூர்வமான முடிவை எடுப்பதற்கு முன்னதாக, நீதிபதிகள் கடந்த ஜனவரி 13 அன்று ஹரிஷ் ராணாவின் பெற்றோரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினர். "நாங்கள் வயதாகிவிட்டோம், எங்களுக்குப் பிறகு எங்கள் மகனை யார் கவனிப்பார்கள்? அவர் அனுபவிக்கும் வேதனை போதும்" என்று பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
எய்ம்ஸ் நிபுணர்கள்
மருத்துவக் குழுவின் அறிக்கை
இந்த வழக்கில் எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் அடங்கிய முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மருத்துவக் குழுக்கள் ஹரிஷ் ராணாவின் உடல்நிலையைப் பரிசோதித்தன. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்றும் மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ளனர். செயற்கை முறையிலான உணவு மற்றும் சுவாசக் குழாய்களை அகற்றி, இயற்கையான முறையில் மரணம் நிகழ அனுமதிப்பதே சிறந்தது என்று மத்திய அரசின் வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்பார்ப்பு
சட்டப் போராட்டமும் எதிர்பார்ப்பும்
இந்தியாவில் நேரடியான கருணைக்கொலை (விஷ ஊசி மூலம் உயிரைப் போக்குவது) தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மறைமுகக் கருணைக்கொலை (மருத்துவ உதவிகளைத் திரும்பப் பெறுவது) சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது. ஹரிஷ் ராணாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு, இந்தியாவில் கருணைக் கொலை தொடர்பான சட்ட நடைமுறைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.