குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக!
குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையைப் பிடித்து பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 158 தொகுதிகளிலும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலுடன் ஒப்பிட்டால் பாஜக சுமார் 60 தொகுதிகளில் கூடுதலாக வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மைப் பெற்று ஆட்சியை அமைக்கிறது. குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக வரும் 12ஆம் தேதி பூபேந்திர படேல் பதவியேற்கிறார் .
பாஜகவின் வெற்றி!
சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை குஜராத் பாஜக சமன் செய்துள்ளது. பில்கிஸ் பானோ பலாத்கார வழக்கின் குற்றவாளிகளை "நல்ல கலாச்சாரம் கொண்டவர்கள்" என்று கூறி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எம்எல்ஏ சந்திரசிங் ரவுல்ஜி வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் திரும்பும் என்று விவாதங்களிலும் கருத்துக் கணிப்புகளிலும் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்று அந்த பேச்சுக்களைப் பொய்யாக்கி இருக்கிறார்கள். 1985ம் ஆண்டு 147 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி சாதனைப் படைத்தது. 37 ஆண்டுகளுக்கு பின் அந்த வரலாற்று சாதனையை பாஜக முறியடித்திருக்கிறது.