ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் - காஷ்மீரில் 30ம் தேதி பிரமாண்ட நிறைவு விழா
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 7ம்தேதி துவங்கிய இந்த யாத்திரை 12மாநிலங்கள் உள்பட 2 யூனியன் பிரேதேசங்களில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு கடந்த 19ம்தேதி ஜம்மு&காஷ்மீர் பகுதிக்குள் ராகுல் காந்தி நுழைந்தார். பல முக்கிய பிரமுகர்கள் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர். இன்று 130வது நாளாக ராகுலின் யாத்திரை தொடரும் நிலையில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெறும் என்பதால் அவருக்கு பெருமளவில் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் 3,970கி.மீ. கடந்து ராகுலின் ஒற்றுமைக்கான யாத்திரை வரும் 30ம்தேதி நிறைவடைகிறது. ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த நிறைவு விழாவில் ராகுல் காந்தி தேசிய கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றவுள்ளார்.
பிரம்மாண்ட நிறைவு விழா - 23 கட்சிகளுக்கு அழைப்பு
இந்த நிறைவுவிழாவினை மிக பிரமாண்டமாக கொண்டாட காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஸ்ரீநகரில் ராகுல்காந்தி கொடியேற்றும் அதேசமையத்தில் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் தலைவர்கள் காங்கிரஸ் அலுவலகங்களில் கொடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறைவுவிழாவில் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த முக்கிய நபர்கள் அனைவரும் பங்குபெறும் நிலையில், திமுக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 23கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டபொழுது, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இதனால் அவர்களையும் இந்த விழாவிற்கு அழைத்துள்ளார்கள். தொடர்ந்து, நிறைவு விழாவிற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் மிகதீவிரமாக செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.