LOADING...
சிலிண்டர் ரீஃபில் செய்யத் தடை! PNG இணைப்பு உள்ளவர்கள் உடனடியாக எல்பிஜியை சரண்டர் செய்ய வேண்டும்
பைப்லைன் கேஸ் இருந்தால் எல்பிஜி சிலிண்டரை ஒப்படைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

சிலிண்டர் ரீஃபில் செய்யத் தடை! PNG இணைப்பு உள்ளவர்கள் உடனடியாக எல்பிஜியை சரண்டர் செய்ய வேண்டும்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 15, 2026
08:53 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு எரிவாயு பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, வீட்டில் பைப்லைன் கேஸ் (PNG) இணைப்பு வைத்திருப்பவர்கள், தங்களது எல்பிஜி சிலிண்டர் இணைப்புகளை உடனடியாகத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

கட்டுப்பாடுகள்

புதிய கட்டுப்பாடுகள் என்ன?

மத்திய அரசு வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட 'திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு விநியோக ஒழுங்குமுறை' ஆணையின்படி, வீட்டில் PNG இணைப்பு உள்ளவர்கள், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ள தங்களது எல்பிஜி இணைப்பை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். பைப்லைன் கேஸ் வைத்திருப்பவர்கள் இனி கேஸ் சிலிண்டர்களை ரீஃபில் செய்யவோ அல்லது புதிய சிலிண்டர் இணைப்புகளைப் பெறவோ அனுமதி இல்லை. ஏற்கனவே PNG பயன்படுத்துபவர்கள் இனி புதிய எல்பிஜி இணைப்பிற்கு விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு

ஈரான் - அமெரிக்கப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பாதிப்பு

இந்தக் கடுமையான முடிவிற்குப் பின்னால் உலகளாவிய எரிபொருள் நெருக்கடி ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக, உலகின் 20% எண்ணெய் கடந்து செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி மார்ச் முதல் வாரத்திலிருந்து மூடப்பட்டுள்ளது. இந்தியா தனது எல்பிஜி தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதில் 85-90% சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. இந்த வழித்தடம் மூடப்பட்டதால் இந்தியா கடும் எரிபொருள் சவாலைச் சந்தித்து வருகிறது.

Advertisement

ஈரான் 

ஈரானின் தளர்வு மற்றும் இந்தியக் கப்பல்கள்

இதற்கிடையில், இந்தியாவுடனான நீண்டகால நட்புறவைக் கருத்தில் கொண்டு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சில இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து இந்தியா டுடே கான்க்ளேவ் 2026இல் பேசிய ஈரானியத் தூதர் முகமது ஃபதாலி, "இந்தியாவின் 'சிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' ஆகிய இரு எல்பிஜி ஏற்றிச் செல்லும் கப்பல்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்று உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்க, உள்நாட்டில் எல்பிஜி தேவையைக் கட்டுப்படுத்த அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

Advertisement