செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி: நள்ளிரவில் அடுத்ததடுத்து நடைபெற்ற திருப்பங்கள்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின், அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் என நேற்று இரவு ஆளுநர் ரவி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால், தமிழக அரசிடம் இருந்து இதற்கான பதில் வரும் முன்னரே, சில மணி நேரங்களில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. கடந்த 13ஆம் தேதி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார், அப்போதைய மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. தொடர்ந்து, அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதையடுத்து, அவரது இலக்காக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இருப்பினும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, ஆளுநர் நிராகரித்தார்.
நேற்றிரவு நடைபெற்ற திடீர் மாற்றங்கள்
செந்தில்பாலாஜி சில குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதாலும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பதாலும், அவர் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பதை கவர்னர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்ற முடிவுகள் முதல்வரை சார்ந்தது என ஆளும் கட்சி போர்க்கொடி தூக்கியது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு, ஆளுநர், செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்துகொண்டு விசாரணைக்கும், நீதிபரிபாலனைக்கும் இடையூறு செய்கிறார். எனவே அவரை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்டார். இதற்கு தமிழக அரசு சார்பாக பதில் தெரிவிக்கும் முன்னரே, மறுஉத்தரவு வெளியானது. அதில், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.