அமைச்சர்கள் இலாகா மாற்றம் ஆளுநர் ஏற்பு; செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு மறுப்பு
தமிழக அமைச்சர்கள் இலாகாவை மாற்றி அமைத்தது தொடர்பாக, ஆளுநர் ரவி எழுப்பிய கேள்விக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதன்படி, அமைச்சர்களின் இலாகாக்களை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியே ஆளுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இரு தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு இருதய கோளாறு ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் வகித்து வந்த மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆகியவற்றை முறையே நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடமும் வழங்க முடிவெடுக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு ஆளுநர் மறுப்பு
நேற்று அனுப்பட்ட முதல்வரின் அமைச்சரவை மாற்றத்தை ஏற்க மறுத்த ஆளுநர் ரவி, இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்திற்கு பிறகு, முதல்வர் அனுப்பிய பதில் கடிதம் கிடைத்த பின்னர், தனது முடிவை மாற்றிகொண்டாதாக தெரிகிறது. இலாகா மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்தாலும், கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடரக்கூடாது எனவும் ஆளுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆளுநர் ரவி, நேற்றைய கடிதத்திலேயே, ஊழல் புகார் சுமத்தப்பட்ட ஒருவர், அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என கூறியது, குறிப்பிடத்தக்கது. தற்போது, ஆளுநரின் இந்த முடிவிற்கு, தமிழக அரசின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.