அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை - உச்சநீதிமன்றம்
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று அவர் காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல்நலம் தேறிய பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது சார்பில் பலமுறை ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்த நிலையிலும் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேல்முறையீடு வழக்கினை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
இதற்கிடையே, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது குறித்த முடிவினை தமிழக முதல்வரே எடுக்கலாம் என்று உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இன்று(ஜன.,5) உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தனர். மேலும், "ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடருவதில் எவ்வித தடையும் இல்லை" என்றும் விளக்கம் அளித்து உத்தரவிட்டுள்ளனர்.