மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்: மம்தா பானர்ஜியிடம் அறிக்கையை கேட்டுள்ளார் ஆளுநர்
மேற்கு வங்க மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ராவில் பொது இடத்தில் வைத்து ஒரு தம்பதியரை சிலர் சரமாரியாக தாக்கியது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் கேட்டு கொண்டுள்ளார். "வைரல் வீடியோவில் காட்டப்பட்ட, காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தால் கவர்னர் அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, முதல்வர் பானர்ஜியிடம் இருந்து உடனடி அறிக்கையை கோரியுள்ளார்," என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் தகாத உறவில் ஈடுபட்ட ஒரு ஜோடியை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் மூங்கில் குச்சியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஜோடியை சரமாரியாக தாக்கிய திரிணாமுல் கட்சி தலைவர்
சமூக ஊடக தளங்களில் ஒரு வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த ஜோடி மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, சோப்ராவின் உள்ளூர் திரிணாமுல் தலைவர் தாஜ்முல் என்ற ஜேசிபி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த குற்றவாளி தற்போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, இஸ்லாம்பூர் போலீஸ் சூப்பிரண்டு ஜோபி தாமஸ் கே வைரல் வீடியோவைப் பார்த்து சரிபார்த்த பிறகு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தார்.