கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - 10 பேரின் ஆயுள் தண்டனையினை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
சேலம், ஓமலூர் பகுதியினை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015ம் ஆண்டு காதல் விவகாரத்தால் ஆணவ கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த பொழுது, யுவராஜ் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு குறித்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா பதிவு போன்ற ஆதாரங்கள் சேகரித்ததில் குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டி தங்களுக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று வாதாடினார்.
ஆனால் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தீர்க்கமாக கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக வாதிட்டார்.
தீர்ப்பு
கோகுல்ராஜ் சடலமாக கிடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த நீதிபதிகள்
இதனையடுத்து, கோகுல்ராஜின் நெருங்கிய தோழியினை முக்கிய சாட்சியாக கொண்டு நீதிபதிகள் வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பிறழ் சாட்சி கூறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு வந்தது.
தொடர்ந்து, கோகுல்ராஜ் சடலமாக கிடந்த ரயில் தண்டவாளம், அவர் கடைசியாக சென்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பகுதிகளை நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இதன் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று கூறி 10 பேரின் ஆயுள் தண்டனையினை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.