கோவா தீ விபத்து: லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது; நாடு கடத்தும் பணி ஆரம்பம் என தகவல்
செய்தி முன்னோட்டம்
கோவாவில் 25 உயிர்களைப் பலிகொண்ட இரவு விடுதி தீ விபத்துச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான குற்றவாளிகளான கௌரவ் மற்றும் சௌரப் லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைத் தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தும் பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, வடக்கு கோவாவின் ஆர்போராவில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் இரவு விடுதியின் இணை உரிமையாளர்களான இந்தச் சகோதரர்கள், டிசம்பர் 6 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்ட உடனேயே இந்தியாவை விட்டு வெளியேறினர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருந்த டிசம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1:17 மணிக்குச் சகோதரர்கள் தாய்லாந்துக்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாகக் கோவா காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்டர்போல் நோட்டீஸ்
இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் வெளியீடு
இந்தச் சகோதரர்களைப் பிடிக்க மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) கோரிக்கையின் பேரில் இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இவர்களது பாஸ்போர்ட்களை ரத்து செய்வது குறித்து வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வந்தது. இதற்கிடையில், இந்தத் தீ விபத்துச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அஜய் குப்தா என்பவரைப் டெல்லியில் கைது செய்த காவல்துறை, அவரை வியாழக்கிழமை (டிசம்பர் 11) கோவாவுக்கு அழைத்து வந்தது.
மனு
ஜாமீன் மனு நிராகரிப்பு
முன்னதாக, தங்களை உடனடியாகக் கைது செய்யாமல் இடைக்காலப் பாதுகாப்பு வழங்கக் கோரி லூத்ரா சகோதரர்கள் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், அவர்கள் வெளிநாட்டில் வணிகப் பயணம் சென்றதாகவும், உடனடியாகத் திரும்பி வந்து கோவா நீதிமன்றத்தை அணுகுவதற்குச் சிறிது கால அவகாசம் மட்டுமே கோரியதாகவும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இந்நிலையில், சகோதரர்கள் இருவரையும் தாய்லாந்தில் கைது செய்து நாடு கடத்தும் பணி தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், இந்தச் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை எட்டு நாட்களுக்குள் தயாராகிவிடும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.