LOADING...
கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்; இன்டர்போல் உதவியை நாடும் கோவா போலீஸ்
இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர்

கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்; இன்டர்போல் உதவியை நாடும் கோவா போலீஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 09, 2025
08:00 am

செய்தி முன்னோட்டம்

கோவாவில் உள்ள 'Birch by Romeo Lane' என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு நடந்தது. தீ விபத்து ஏற்பட்ட ஐந்தே மணி நேரத்தில், விடுதியின் உரிமையாளர்களான கௌரவ் மற்றும் சௌரப் லூத்ரா ஆகிய இருவரும் டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் தாய்லாந்தில் உள்ள பூக்கெட் தீவிற்கு தப்பி சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. டிசம்பர் 7 அதிகாலை இவர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, தலைமறைவான இருவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது, தலைமறைவான லூத்ரா சகோதரர்களை கைது செய்வதற்காக, கோவா காவல்துறை இன்டர்போல் பிரிவுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இரங்கல்

தப்பி செல்லும் முன் சமூகவலைத்தளத்தில் இரங்கல் செய்தி

இதற்கிடையில், உரிமையாளர்களில் ஒருவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் (Instagram) ஒரு பதிவையும் வெளியிட்டார். இது அவர்கள் தாய்லாந்திற்கு தப்பி செல்லும் முன்னர் பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. "பிர்ச்சில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் விளைவாக ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பால் நிர்வாகம் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகிறது" என்று அவர் எழுதினார். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "சாத்தியமான அனைத்து வகையான உதவி, ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும்" அவர் உறுதியளித்தார். இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின் படி, லூத்ரா சகோதரர்கள் விதிகளை மீறி, அரசு நிலத்தில் மற்றொரு சட்டவிரோத விடுதியையும் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement