புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் கோ ஏர்லைன்ஸ் நிறுவனம்
நிதிநெருக்கடியில் சிக்கியிருக்கும் GO Airlines விமான நிறுவனமானது கடந்த மே மாதம் திவால் தீர்வு நடவடிக்கைக்காக விண்ணப்பித்திருந்தது. ரூ.11,000 கோடி கடனில் சிக்கியிருக்கும் அந்நிறுவனம், ரூ.10,000 வரை இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்து தீர்வு நடவடிக்கைக்கு விண்ணப்பத்திருந்தது. கோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் திவால் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அபிலாஷ் லால் என்பவரை திவால் தீர்வு அதிகாரியாக நியமித்தது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT). தற்போது திவால் தீர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நடவடிக்கையாக செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. கோ ஏர்லைன்ஸில் முதலீடு செய்ய விருப்பமிருப்பவர்கள் ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் திவால் தீர்வுக்கு விண்ணப்பித்தது கோ ஏர்லைன்ஸ்?
செய்தித்தாளில் விளம்பரம் செய்வது என்பது திவால் தீர்வு நடவடிக்கையின் முதல் நிலை ஆகும். இதனை திவால் தீர்வு அதிகாரியின் மூலமே மேற்கொள்ள முடியும். கோ ஏர்லைன்ஸ் நிறுவனமானது இந்தியாவில் 54 ஏர்பஸ் A320 நியோஸ் விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமானங்களில் அமெரிக்க விமான இன்ஜின தயாரிப்பாளரான பிராட & விட்னியின் இன்ஜின்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த இன்ஜின்களில் உள்ள கோளாறால் தங்களுடைய 54 விமானங்களில் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் செயல்பாட்டில் இல்லாமல் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் கோ ஏர்லைன்ஸ், அதன் காரணமாகவே நஷ்டம் ஏற்பட்டு திவாலாகும் நிலைக்குச் சென்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என கோ ஏர்லைன்ஸின் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது பிராட் & விட்னி நிறுவனம்.