7 வயது சிறுமி எங்கே? 10 தனிப்படைகள் தேடியும் 10 நாட்களாக தொடரும் மர்மம்
செய்தி முன்னோட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமான வழக்கில், இன்றுடன் 10 நாட்கள் கடந்த நிலையிலும் சிறுமி குறித்து எந்தவொரு உறுதியான துப்பும் கிடைக்காததால் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த அச்சிறுமி, தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் விமரிசையாக கொண்டாடிய அடுத்த சில நாட்களிலேயே, அதிகாலை 5 மணியளவில் படுக்கையில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தனிப்படைகள்
600 செல்போன் எண்கள் ஆய்வு
இந்த மர்ம வழக்கில் துப்பு துலக்குவதற்காக 3 டி.எஸ்.பி.க்கள், 5 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த அதிகாலை நேரத்தில் அச்சிறுமியின் வீட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயன்பாட்டில் இருந்த சுமார் 600 செல்போன் எண்களின் சிக்னல்கள் மற்றும் அழைப்பு விவரங்களைச் சைபர் கிரைம் உதவியுடன் சேகரித்து போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள் யாரேனும் நடமாடினார்களா அல்லது வெளியூர் நபர்களின் நடமாட்டம் இருந்ததா என்ற கோணத்திலும் தொடர் புலன்விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
20 பேரிடம் விசாரணை
மலைகளில் தேடுதல் வேட்டை
சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 20 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொருபுறம், அப்பகுதியில் உள்ள அடர்ந்த மலைப்பகுதிகள் மற்றும் பாறை இடுக்குகளில் சிறுமி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், ஆயுதம் தாங்கிய அதிவிரைவுப் படை போலீசார் களமிறக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
10 நாட்களாகியும் சிறுமி கிடைக்காததால் பெற்றோரும் கிராம மக்களும் பெரும் தவிப்பில் உள்ள நிலையில், குற்றவாளிகளைக் கண்டறிந்து சிறுமியை உயிருடன் மீட்க தனிப்படையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.