ஜம்மு காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநர் ஆகிறாரா குலாம் நபி ஆசாத்?
முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக பதவியேற்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று நேற்று(அக். 1) கூறினார். இது குறித்த வதந்திகள் தீயாக பரவி வந்த நிலையில், அதற்கு குலாம் நபி ஆசாத் விளக்கம் அளித்துள்ளார். "அதிகமாக வேலை செய்யும் வதந்தி ஆலைகளை நம்ப வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். குலாம் நபி ஆசாத் அடுத்த எல்ஜி(துணைநிலை ஆளுநர்) ஆகப் போகிறார் என்று ஒரு புதிய வதந்தி எழுந்துள்ளது. நான் வேலை தேடி ஜம்மு காஷ்மீருக்கு வரவில்லை, மக்களுக்கு சேவை செய்ய தான் நான் விரும்புகிறேன்." என்று ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின்(டிபிஏபி) நிறுவன தினத்தைக் குறிக்கும் பேரணியில் உரையாற்றும் போது அவர் கூறினார்.
'மறுவாழ்வு தேடவில்லை, மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்'
குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்ததற்கு பிறகு, கடந்த ஆண்டு ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் மறுவாழ்வு தேடி கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை சிலர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவை ஜம்மு காஷ்மீர் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய பிரச்சனைகள் என்று கூறிய குலாம் நபி ஆசாத், இப்பகுதியின் சுற்றுலா திறனை பயன்படுத்தி அதை தீர்க்க விரும்புவதாக தெரிவித்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வாழ்வாதாரத்தை வழங்கும் ஆற்றல் சுற்றுலாத்துறைக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.