31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட நபர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ப்பு; உத்தரபிரதேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட தங்கள் மகன் பீம் சிங்குடன் காசியாபாத் குடும்பம் மீண்டும் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில், தற்போது 40 வயதாகும் பீம் சிங், 1993 இல் பள்ளியிலிருந்து திரும்பும் போது ஒன்பது வயதில் கடத்தப்பட்டார். பல வருட விரக்திக்குப் பிறகு, பீமின் தங்கை ஹேமா, உள்ளூர் செய்தித்தாள் கட்டுரையில் அவரது சாயலில் இருக்கும் ஒருவரின் புகைப்படத்தை அடையாளம் கண்டுகொண்டபோது, குடும்பத்தின் நம்பிக்கை மீண்டும் புத்துயிர் பெற்றது. இதையடுத்து காவல்துறை உதவியுடன் பீம் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். இதனால், குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், பீமின் தந்தை துலாரம், கூடுதல் உறுதிப்படுத்தலுக்கு டிஎன்ஏ சோதனையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இது விரைவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
காணாமல் போன சிறுவன் 40 வயதில் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது எப்படி?
1993இல் சிறுவனாக இருந்த பீம் சிங் கடத்தப்பட்ட பின்னர், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் கால்நடை மேய்க்கும் கொத்தடிமையாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்து தப்பிக்க மேற்கொண்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால், நீண்ட காலம் அங்கேயே இருந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு ட்ரக் டிரைவரை வழியில் சந்தித்தபோது தனது கதையை சொன்ன பீம் சிங்கை, அந்த டிரைவர் காப்பாற்றி டெல்லி வரை கொண்டு வந்துள்ளார். அங்கிருந்து காசியாபாத் போலீசை அடைந்த பீம் சிங், தனது கதையை கூற, அதன்பின்னர் குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில், பீம் தனது தாய் மற்றும் சகோதரிகளை உடனடியாக அடையாளம் காட்டினார். அவரது தாயார் விவரித்த மச்சம் மற்றும் வடுக்கள் உட்பட அவரது உடல் அடையாளங்கள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தின.